
ஜெனீவாக் கூட்டத் தொடர் : இலங்கைக்கு மேலும் காலஅவகாசம் கோருகின்றதா த.தே.கூ ? சுதன்ராஜ்
அதாவது இலங்கையை ஜெனீவாவில் பிணையெடுத்தல். இதற்கான 'லொபியை' தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் அவர்கள் ஈடுபட்டிருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
PARIS, FRANCE, September 14, 2018 /EINPresswire.com/ --இலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டு கால அவகாசத்தினை பெற்று கொடுக்கும் நிலைப்பாட்டில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளது என்ற செய்தியோடுதான், ஐ.நா மனித உரிமைச்சபையின் 39வது கூட்டத் தொடர் தொடங்குகின்றது. செப்ரெம்பர் 10 முதல் 28 வரை இத் தொடர் இடம்பெறுகின்றது.
இலங்கைக்கு மேலதிகமாக இரண்டு ஆண்டினை வழங்கியிருந்த தீர்மானத்தின் அவகாசம் முடிவதற்கு இன்னும் ஆறு மாதங்கள் உள்ளன. எதிர்வரும் 2019ம் ஆண்டு இடம்பெறுகின்ற மார்ச் மாதக் கூட்டத் தொடரிலேயே இத்தீர்மானம் தொடர்பிலான விவாதம் இடம்பெறும். இந்நிலையில் இந்த இடைப்பட்ட கால இக்கூட்டத் தொடரில் இலங்கை பேசு பிரதான பேசு பொருளாக காணப்படாவிடினும், இலங்கை பேசப்படுகின்ற இடங்கள் கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலில் காணப்படுகின்றன.
குறிப்பாக ஐ.நா மனித உரிமைசபையின் புதிய ஆணையாளராக பொறுப்பேற்றுள்ள சிலி நாட்டைச் சேர்ந்த மிசல் பசேலே ஜெறியா அம்மையார் அவர்கள் இலங்கை தொடர்பில் எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருப்பார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.
பொதுவாக முன்னராக இருந்த ஆணையாளர்கள் விட்டுச் செல்லுகின்ற நிலைப்பாட்டையே தொடர்சியாக பேணுகின்ற ஒரு பண்பு ஆணையாளர்களிடத்தில் காணப்படுகின்றது. முன்னராக நவநீதம்பிள்ளை அம்மையார் அவர்கள் இலங்கை தொடர்பில் கொண்டிருந்த ஒருவிதமான இறுக்கமான நிலைப்பாட்டைத்தான் செயிட் ராட் அல் {ஹசேன் அவர்களும் கடைப்பிடித்திருந்தார்.
2015ம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்கு பின்னராக இக்காலத்தில் இலங்கை அரசின் நல்லாட்சி வலைக்குள் வீழ்ந்தவர்களாக, நாடுகள் பலவும் பாராட்டுப்பத்திரம் வாசித்துக் கொண்டிருந்தாலும், செயிட் ராட் அல் {ஹசேன் அவர்கள், தனது அறிக்கைகளில் இலங்கை தொடர்பில் இறுக்கமான நிலைப்பாட்டைத்தான் வெளிக்காட்டி வந்துள்ளார்.
உலக நியாயாதிக்கத்தின் கீழ் இலங்கை மீது அனைத்துலக நாடுகள் நடவடிக்கை என்ற தனது இறுக்கமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தவர்.
இந்நிலையில் புதிய ஆணையாளராக வந்துள்ள மிசல் பசேலே ஜெறியா அம்மையார் அவர்களும், இலங்கை தொடர்பில் இறுக்கமான நிலைப்பாட்டையே கொண்டிருப்பார் என்ற கருத்து காணப்படுகின்றது.
சிலி நாட்டைச் சேர்ந்த இவர், இரண்டு தடவைகள் சிலியில் அதிபராக இருந்தவர் என்பதோடு, ஐ.நாவின் பெண்கள் தலைவியாகவும் இருந்துள்ளார். பல்வேறு பொறுப்புக்களில் இருந்துள்ள இவர், சிலியின் இருண்ட காலம் என வர்ணிக்கப்படுகின்ற சர்வாதிகாரி பினோசேயின் ஆட்சிக்காலத்தில் பல நெருக்கடிகளை நேரடியாக சந்தித்தவராக இருக்கின்றார். சிறையும் சென்றிருக்கின்றார்.
சர்வாதிகாரி பினோசேயின் காலத்தில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களாக உள்ளனர். அவ்வகையில் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் துயரங்களை புரிந்தவராக இவர் இருப்பார் நம்பிக்கையும் உள்ளது.
இந்த நம்பிக்கையோடுதான் இக்கூட்டத் தொடரையும் தமிழர் தரப்பு எதிர்கொள்ளத் தயாராகின்றது.
முன்னர் குறிப்பிட்டது போல் இலங்கை மையப் பேசு பொருளாக இல்லாவிடினும், இலங்கை பேசப்படுகின்ற இடங்களாக நிகழ்ச்சி நிரலில் காணப்படுகின்றன.
குறிப்பாக ஐ.நாவின் சிறப்பு நிபுணர்கள் இருவரின் அறிக்கைகள் சபையில் சமர்பிக்கப்பட இருப்பதோடு, விவாதங்களும் இடம்பெற இருக்கின்றன. எதிர்வரும் 12-13ம் தேதிகளில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள் நிகழாமை தொடர்பான ஐ.நாவின் சிறப்பு நிபுணர் பப்லோ டி கிரீப்பின் அறிக்கை, தன்னிச்சையாக தடுத்து வைத்தல் தொடர்பான சிறப்பு நிபுணரின் அறிக்கை ஆகியனவே சபைக்கு வர இருக்கின்றன.
இதனை எதிர்கொள்ளும் இலங்கை அரசு, இரண்டு ஆண்டுகால அவகாச முடிவுறும் எதிர்வரும் 2019ம் மார்ச் மாத கூட்டத் தொடருக்கு முன்னராக தான் ஏற்றுக்கொண்டிருந்த 25 விடயங்களில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிவிட்டதாக காட்டிக்கொள்வதற்கான முனைப்பிலேயே ஈடுபடத் தொடங்கும் என்பது தெளிவான ஒன்று.
குறிப்பாக வரும் மார்ச் அமர்வின் போது, இலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டுகால அவகாசத்தினை பெற்று கொடுக்கின்ற நிலைப்பாட்டுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு காணப்படுவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான 'லொபியை' தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சர்வதேச விவகாரங்களை கையாளுகின்ற கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் அவர்கள் ஈடுபட்டிருப்பதாக அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
அதாவது இலங்கையை ஜெனீவாவில் பிணையெடுத்தல்.
அதாவது தமிழ் மக்களின் ஆணையின் பெயரால் நல்லாட்சி அரசாங்கத்தினை ஆட்சிக்கதிரைக்கு கொண்டு வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை அரசாங்கத்துக்கு மேலதிகமாக இரண்டு ஆண்டுகால அவகாசத்தினை கடந்த முறை பெற்றுக் கொடுத்து போல், இம்முறையும் பெற்றுக் கொடுக்கப்போகின்றதா என்ற கேள்வி பலமாக எழுகின்றது.
பிரித்தானிய இராஜதந்திர வட்டாரங்கள் ஊடாக கசிந்துள்ள இத்தகவலுக்கான பதிலை கூற வேண்டியது தமிழ் தேசியக் கூட்டமைப்பே ஆகும். நடந்தேறிய பாரிய மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய இடத்தில் இலங்கை அரசு இருப்பது போல், இலங்கை அரசை மேற்குலகுடன் இணைந்து ஜெனீவாவில் பிணை எடுத்த விவகாரத்தில், தமிழ் மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய இடத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு காணப்படுகின்றது.
இராஜதந்திர மட்டத்திலான இச்செய்தி, உண்மையாக இருக்குமெனில் தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்துக்கு பெரும் பாதகத்தை அது ஏற்படுத்துவது மட்டுமல்ல, நீர்த்துப் போகச் செய்கின்ற ஒன்றாக காலநீடிப்பு என்பது அமைந்துவிடும்.
இத்தகையதொரு புறச்சூழலில்தான் வரும் மார்ச் அமர்வுகளை நோக்கி, தாயகமும், புலமும் இணைந்ததான இராஜதந்திர நகர்வுகளுக்கு தமிழர் தரப்பு (தமிழர் தேசியக் கூட்டமைப்பு அல்லாத) தன்னை தயார்படுத்தத் தொடங்கியுள்ளது.
இதனை வட மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாடு புலம்பெயர் தமிழர் அமைப்புக்களில் பலமாக காணப்படுகின்றது. இந்நிலைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் வட மாகாண சபையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம், நிலத்தையும்-புலத்தையும் ஒரு மையப்புள்ளியில் சந்திக்க வைத்துள்ளன.
'இலங்கையால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்கள் 330/1யும் 34/1யும் இதுவரை அமுல்படுத்த முடியாமையாலும், விரும்பாமையாலும், இலங்கை மேற்குறிப்பிட்ட தீர்மானங்களை 2019 பங்குனி மாதத்திற்கு முன்னர் முழுமையாக அமுல்படுத்த தவறுமாயின், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையானது, இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முற்படுத்துவதன் பொருட்டு அல்லது விசேடமாக உருவாக்கப்படும் இலங்கைக்கான சர்வதேச நியாயசபையில் முற்படுத்துவதன் பொருட்டு, இலங்கையை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு முன்கொண்டுவருதல் வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையை இச்சபையானது கோருகின்றது.' என அத்தீர்மானம் குறிப்பிடுகின்றது.
'யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிலை, காணாமற்போனோர், தமிழ் அரசியற் கைதிகள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்த் தொடரும் கட்டுப்பாடில்லாத தடுத்துவைப்பு, தமிழ்ப் பிரதேசங்களில் பெருமளவிலான பாதுகாப்புப் படைகள் நிலைகொண்டுள்ளமை மற்றும் தமிழ் மக்களின் சொந்தக் காணிகளில் இலங்கைப் பாதுகாப்புப் படைகள் தரித்திருக்கின்றமை ஆகியவற்றைக் கண்காணித்து அறிக்கை தருவது பொருட்டு இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையிடும் பிரதிநிதி ஒருவரை நியமிக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையை இச்சபையானது கோருகின்றது என்றும் அத்தீர்மானம் வலியுறுத்துகின்றது
பாதிக்கப்பட்ட மக்களின் குரலாய் ஒலிக்கும் இக்கோரிக்கை அனைத்துலக சமூகத்தின் காதுகளுக்கு கேட்கின்றதோ இல்லையோ நிச்சயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் காதுகளுக்கு முன்னமே கேட்கும் என்று எதிர்பார்கலாம்.
Contact: sutharsansivagurunathan@gmail.com
Suthan Raj
சுதன்ராஜ்
+33-755-168-341
email us here

Distribution channels: Human Rights, International Organizations, Media, Advertising & PR, Politics, World & Regional
Legal Disclaimer:
EIN Presswire provides this news content "as is" without warranty of any kind. We do not accept any responsibility or liability for the accuracy, content, images, videos, licenses, completeness, legality, or reliability of the information contained in this article. If you have any complaints or copyright issues related to this article, kindly contact the author above.
Submit your press release